பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து காங்கிரசில் மாறுபட்ட கருத்து...!


பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து காங்கிரசில் மாறுபட்ட கருத்து...!
x
தினத்தந்தி 23 April 2022 6:21 PM IST (Updated: 23 April 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன.

மேலும் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். 

இதைத் தொடர்ந்து கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் சோனியாகாந்தியிடம் அளித்துள்ளார்.

சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறுபிரச்சினைகள் விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார். 

மேலும் தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவரத் தயார் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரசிற்கு பயன் அளிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை சோனியாகாந்தி நியமித்திருந்தார். 

பிரியங்கா காந்தி , கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, பி.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழு பிரசாந்த கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் தங்களது கருத்தை சோனியாகாந்தியிடம் சமர்ப்பித்துள்ளது. 

இதையடுத்து பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பது உள்ளிட்ட அவரது பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவை சோனியா காந்தி எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாறுபட்ட  கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

பெரும்பாலான பரிந்துரைகள் நடைமுறை பயனுள்ளவை என்று சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரை  ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளிப்படையாக பாராட்டி உள்ள நிலையில்,அவர் கட்சியில் இணைவதை எதிர்ப்பவர்கள் சீர்திருத்த எதிர்ப்பாளர்கள் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், காங்கிரசுக்கு பலன் கிடைக்கும் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

Next Story