சபரிமலையில் தரிசன ஆன்லைன் முன்பதிவு: கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
சபரிமலையில் தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலம், பத்தனம் திட்டை மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு அனைத்தும், கேரள காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இதற்கு எதிராகவும், ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் அனைத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு இந்து அமைப்புகள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தன. இந்த மனுக்கள் மீது பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று இறுதி விசாரணை நடந்தது.
அப்போது கருத்து தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், "சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செயல் முறையை அமல்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் கேரள காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பியது. மேலும், சபரிமலை அய்யப்பன் கோவில் விஷயத்தில் தலையிட கேரள அரசுக்கோ, காவல் துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. கோவிலை நிர்வகிக்கவும், முழு கட்டுப்பாட்டில் வைக்கவும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆகவே சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு உட்பட அனைத்தையும் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்" என்று உத்தரவிட்டது.
அதே வேளையில் சபரிமலையில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய வசதியாகவே ஆன்லைன் முன்பதிவு செயல் திட்டத்தை கேரள காவல் துறை அமல்படுத்தியது என்றும், அதில் எந்தவித கெட்ட நோக்கமும் இல்லை என்றும் கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story