சோனியா காந்தி இல்லத்தில் ஆலோசனை; காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு


சோனியா காந்தி இல்லத்தில் ஆலோசனை; காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 April 2022 10:25 AM GMT (Updated: 25 April 2022 10:25 AM GMT)

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்து வரும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.




புதுடெல்லி,



டெல்லியில் உள்ள ஜன்பாத் பகுதியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களான முன்னாள் மத்திய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கமல்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ள கட்சியின் சீரமைப்புக்கான திட்டங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த வாரம் டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.  இதில், பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் கிஷோர், கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை சோனியாவிடம் அளித்துள்ளார்.

சோனியாவுடன் கடந்த 20ந்தேதி முதல் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவரித்ததோடு, 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டி காட்டினார்.

தனக்கு உரிய பதவி தந்து, அதிகாரம் தந்தால் அதிரடியாக பல புதிய வியூகங்களை கொண்டுவர தயார் என்றும் அவர் கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரசிற்கு பயன் அளிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை சோனியா நியமித்துள்ளார்.

அந்த குழு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கையை சோனியாவிடம் சமர்ப்பித்துள்ளது.  தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் விலகி, காங்கிரசிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியானது.

கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், காங்கிரசுக்கு பலன் கிடைக்கும் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்று கூறப்படுகிறது.  இந்த சூழலில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, பிரசாந்த் கிஷோர் முன்பு தலைமையேற்று நடத்திய ஐபேக் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கிஷோருடன் ரூ.300 கோடியளவில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது.  ஆனால், இதனை சந்திரசேகர ராவ் திட்டவட்டமுடன் மறுத்துள்ளார்.  ஐபேக்கின் தலைவராக பல ஆண்டுகள் இருந்து வந்த கிஷோர் அந்த அமைப்புடனான தனது தொடர்பை அதிகாரப்பூர்வ முறையில் நிறுத்தி கொண்டார்.

என்றாலும் கூட அந்த அமைப்பின் அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் கிஷோரின் ரகசிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரசில் கிஷோர் இணைவது, காங்கிரசை முன்னெடுத்து செல்வது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல முக்கிய விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக காங்கிரசின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு டெல்லியில் இன்று நடந்து வருகிறது.  இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.


Next Story