கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் - மந்திரி பி.சி.நாகேஸ்
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது நாட்டில் கொரோனா 4-வது அலைக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் கொரோனா 4-வது அலை பாதிப்பு அதிகமாக இருக்கும் சில நிபுணர்கள் கூறியுள்ளனர். கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது. இங்கு தினசரி 30 என்ற அளவில் ஏற்பட்டு வந்த வைரஸ் தொற்று 60-ஐ தாண்டியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தொடங்கும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் இந்த பள்ளிகளை திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டின் கல்வி ஆண்டு திட்டமிட்டப்படி வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கப்படும். இதில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம். வதந்திகளை பெற்றோர் மற்றும் குழந்தைகள் நம்பக்கூடாது. பள்ளிகளை திறக்கும் முன்பு சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பு செயல்படை வழங்கும் வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story