உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு; வேறு எந்த நாட்டின் ஒப்புதலும் தேவையில்லை - மந்திரி ஜெய்சங்கர்
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன என்று கேட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று முன்தினம் 7ஆவது ரைசினா சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். போலந்து, ஸ்லோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அதில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அந்நாட்டு மக்கள் அங்கு என்ன பாடுபட்டனர் என்பதை யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும். இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறைகூவலாகக் கூட இருக்கலாம். ஆசியாவில் - ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் - நெருக்கடியை எதிர்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன” என்று கேட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், இந்தியா இருபக்கமும் சாரா நிலையை எடுத்தது என்பதை வலியுறுத்தினார்.
உக்ரைன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய நாடுகள் தரப்பில் மந்திரி ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
“ஆப்கானிஸ்தானில் நடந்தது போன்று தான் உக்ரைனில் நடந்து வருகிறது. நாம்(இந்தியா) யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உலகை மகிழ்விப்பதை விட, நாம் யார் என்ற அடிப்படையில் உலகத்துடன் ஈடுபடுவது நல்லது.
இந்தியா மற்ற நாடுகளை மகிழ்விக்க முடியாது. மற்ற நாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை போன்ற ஒரு "வெளிர் சாயல்" ஆக இந்தியா இருக்க முடியாது.
மற்றவர்கள் தான் நம்மை வரையறுக்கிறார்கள் என்ற எண்ணம்; நாங்கள் மற்ற தரப்பிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற எண்ணம் விலக வேண்டும். இது நாம் பின்னுக்குத் தள்ள வேண்டிய சகாப்தம் ஆகும். கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா ஜனநாயக நாடாக திகழ்ந்து வருவது, கடந்த 75 ஆண்டுகளில் உலகிற்கு நாம் ஏற்படுத்திய வித்தியாசம் ஆகும்” என்றார்.
Related Tags :
Next Story