நாட்டில் மே மாத தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


நாட்டில் மே மாத தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 April 2022 12:33 AM IST (Updated: 30 April 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் மே மாத தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் கூறியதாவது:-

மத்திய மற்றும் வட இந்தியாவில் 46 டிகிரி செல்சியஸ் (115 டிகிரி பாரன்ஹீட்) அடைந்துள்ளன. இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரும். டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா ,ஜார்கண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும். பொதுவாக குளிர்ச்சியான மழை பெய்யும் பருவமழைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதுவரை கடுமையான கோடையே நீடிக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்பதால் மாநிலங்களுடனும், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைப் பிரிவினருடனும் இணைந்து செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் சுகாதார நடவடிக்கைகளுக்கான செயல் திட்டங்களை செயல்படுத்த கோரியுள்ளோம்.

இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேசமயம் அருணாச்சல பிரதேசத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அசாம் மற்றும் மேகாலயாவிலும், நாளை முதல் மே 2-ம் தேதிக்குள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story