கோவிலை இடமாற்றினால் கும்பலாக தற்கொலை செய்து கொள்வோம்; ரெயில்வேக்கு இந்து அமைப்பினர் மிரட்டல்!
ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அருகிலுள்ள கோவில், மசூதி மற்றும் தர்காவிற்கும் இதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
லக்னோ,
கோவிலை இடமாற்றினால், நாங்கள் ஒரு கும்பலாக சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று இந்திய ரெயில்வே துறைக்கு இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வினோத சம்பவம், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து, 250 ஆண்டுகள் பழமையான சாமுண்டா தேவி கோவிலை மாற்ற இம்மாதம் ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.மேலும், ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், தாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாகவும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர், வட மத்திய ரயில்வேயின் ஆக்ரா பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
300 ஆண்டுகள் பழமையான கோவில், எந்த சூழ்நிலையிலும் மாற்றப்படாது என தெரிவித்தனர்.அவர்கள், கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கிய ஆக்ரா கோட்ட ரெயில்வே மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.ஆக்ராவில் ரெயில்வே பயணிகள் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு, இடையூறாக இருக்கும் கோயிலை மாற்ற வேண்டியதாயிற்று. அப்படி கோவிலை அகற்றாவிட்டால், நடைமேடையை மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அருகிலுள்ள கோவில், மசூதி மற்றும் தர்காவிற்கும் இதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தர்கா நிர்வாகி ஒருவர் கூறுகையில், “திடீரென்று, ரெயில்வே எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியது. இது நியாயமற்றது. நாங்கள் கடுமையாக போராடுவோம்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்மனுதாரர்கள் மே 13-ம் தேதி விசாரணைக்காக ரெயில்வே நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.
Related Tags :
Next Story