நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக டாக்டர் சுமன் பெரி பொறுப்பேற்றார்!
இதற்கு முன்னதாக வாஷிங்டன் டிசி-யில் உள்ள உலக வங்கியிலும் பெரி பணியாற்றியுள்ளார்.
புதுடெல்லி,
நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக இன்று முதல் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் சுமன் பெரிக்கு நிதி ஆயோக் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2017 முதல் நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருந்துவந்த பொருளாதார நிபுணரான ராஜீவ் குமார், தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்றுடன் பதவி விலகினார். இதனையடுத்து, அனுபவமிக்க கொள்கைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி நிர்வாகியுமான பெரி, மத்திய அரசின் முதன்மை சிந்தனைக் குழு தலைவரான டாக்டர் ராஜீவ் குமாரிடம் இருந்து பொறுப்பேற்கவுள்ளார்.
தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராகவும், ராயல் டச்சு ஷெல் அமைப்பின் உலகளாவிய தலைமை பொருளாதார நிபுணராகவும் பெரி பணியாற்றியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, புள்ளியியல் ஆணையம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக வாஷிங்டன் டிசி-யில் உள்ள உலக வங்கியிலும் பெரி பணியாற்றியுள்ளார். லத்தீன் அமெரிக்காவை மையமாகக் கொண்ட மேக்ரோ பொருளாதாரம், நிதிச் சந்தைகள் மற்றும் பொதுக் கடன் மேலாண்மை ஆகிய துறைகளிலும் அவர் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
புதிய, இளம் திறமையாளர்கள் மற்றும் அரசின் அனைத்து பங்குதாரர்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்ட ஆற்றல்மிக்க அமைப்பை ராஜிவ் குமார் தம்மிடம் விட்டுச் செல்வதாக பெரி குறிப்பிட்டார்.
"உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் வேளையில் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆழமான பகுப்பாய்வு மற்றும் விரிவான விவாதங்களின் அடிப்படையில் முன்னேற்றம் குறித்த தெளிவான பார்வையை உருவாக்குவதும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் இணைந்து செயலாற்றுவது நிதி ஆயோக்கின் சவாலான பணி.
பொருளாதார வளர்ச்சி இறுதியில் மாநிலங்களில் தான் நிகழ்கிறது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூகத் தெரிவுகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story