இந்தியாவில் கொரோனா 4-வது அலை பரவுகிறதா? ஐ.சி.எம்.ஆர் விளக்கம்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்தது. தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கினர். ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி சராசரியாக தினமும் பதிவாகி வரும் நிலையில், தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்தது. வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளான முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பல மாநிலங்களில் மீண்டும் கட்டாயப்படுத்தின. தொற்று பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்தியாவில் கொரோனா 4-வது அலை பரவல் ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
இந்த நிலையில், இது குறித்து ஐ.சி.எம்.ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் சமிரன் பண்டா கூறுகையில்,” மாவட்ட அளவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இது எதிர்பாராதவிதமான சிறிய ஏற்றம் என்று அழைக்கப்படும்.
சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாகவே இந்த ஏற்றம் கட்டுப்படுத்தப்படக்கூடும். எனவே, இதை நான்காவது அலையாக கருத முடியாது. நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. முக்கியமாக புதிதாக எந்த உருமாறிய கொரோனாவும் கண்டறியப்படவில்லை. இது தற்போதைக்கு நாட்டில் 4-வது அலை பரவல் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது” என்றார்.
Related Tags :
Next Story