மூணாறு மலர் கண்காட்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்....!


மூணாறு மலர் கண்காட்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்....!
x
தினத்தந்தி 2 May 2022 12:10 PM IST (Updated: 2 May 2022 12:10 PM IST)
t-max-icont-min-icon

மூணாற்றில் 4 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வருகின்றனர்.

கூடலூர்,

தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறு சுற்றுலா உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் சுற்றுலாவை மேம்படுத்த மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள், புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாவரவியல் பூங்காவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை கேரள மந்திரி முகமது ரியாஸ் தொடங்கி வைத்தார்.

வண்ணமயமாக ஜொலிக்கும் பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் 3 ஆயிரம் ரோஜாக்கள், 2 ஆயிரம் டாலியாக்கள், பெட்ரா, கோமன், யூக்கா, பைலான்ஸ், சில்வர், பில்பம் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மலர்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதனால் பூங்காவில் திரும்பிய திசையெல்லாம் வண்ணமயமாக காட்சியளித்தது. காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உணவு கண்காட்சி, செல்பி பாயிண்ட், கேரள நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது ரம்ஜான் விடுமுறையில் உள்ளவர்களும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவு மூணாறு பகுதிக்கு வந்து அங்குள்ள மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் இங்கு ஏராளமான சினிமாத்துறையினர் முகாமிட்டு படப்பிடிப்புகள் நடத்தி வருகின்றனர். அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மலர் கண்காட்சி மற்றும் சினிமா படப்பிடிப்புகளால் மூணாறு களைகட்டி வருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story