பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பெண்கள் மீது திராவகம் வீச்சு...!


பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பெண்கள் மீது திராவகம் வீச்சு...!
x
தினத்தந்தி 6 May 2022 7:24 AM IST (Updated: 6 May 2022 7:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயது இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசினார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர் ஒருவர் தனது அண்ணி மீதான குடும்ப தகராறில் திராவகம் வீசி இருந்தார். அதே ஆண்டில் மேலும் 6 பெண்கள் திராவகம் வீச்சுக்கு ஆளானார்கள். 2020, 2021 ஆண்டுகளில் பெங்களூருவில் தலா 3 பெண்கள் மீதான திராவக வீச்சு சம்பவம் நடந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 51 வயதான பெண் நாடக கலைஞர் மீது சக கலைஞர்கள் திராவகம் வீசி இருந்தனர்.

அதன்பின்னர் ஒரு பெண் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடந்தது. தற்போது 24 வயது இளம்பெண் மீது காதலிக்க மறுத்ததால் திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இந்த 16 வழக்குகளில் 12 வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது. 4 வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, திராவகம் வீச்சு சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுகிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக திராவக வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

திராவக வீச்சில் பாதிக்கப்படுபவர்கள் திடீரென தாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெறுகின்றனர். இதனால் வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை என்றனர்.

கூடுதல் டி.ஜி.பி.யான ஹிதேந்திரா கூறும்போது, திராவகம் வீசப்படும் சம்பவங்கள் மனிதாபிமானமற்ற செயல். நாங்கள் விரைவான விசாரணை நடத்துவதை உறுதி செய்வோம். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story