பாஜகவின் 'தஜிந்தர் சபால் சிங்’ கைது விவகாரம்: இரு மாநில போலீஸ் இடையே மோதல்
டெல்லி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் தஜிந்தரை எடுத்துக் கொண்டதற்கு எதிராக பஞ்சாப் போஈசார் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.
புதுடெல்லி,
பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் சபால்சிங் பக்கா சமூக வலைதளங்களில் மிக கடுமையான பதிவுகளை வெளியிட்டு வந்தார். டெல்லியில் வசிக்கும் தஜிந்தர், கடந்த மார்ச் மாதம் காஷ்மீர் பைல்ஸ் திரைபட விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.
இதனால் பஞ்சாப் போலீசார், தஜிந்தர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தஜிந்தருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தஜிந்தர் விசாரணைக்கு ஆஜராக மறுத்தார்.
இந்நிலையில் டெல்லிக்கு வந்து பஞ்சாப் போலீசார் தஜிந்தர் சபால் சிங்கை கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து பஞ்சாப்பின் மொகாலிக்கு தஜிந்தரை போலீசார் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் தஜிந்தர்சிங்கை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக அவரது தந்தை டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் தஜிந்தர்சிங் கடத்தப்பட்டதாக டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இந்த புகாரின் அடிப்படையில் அரியானா வழியாக தஜிந்தர்சிங்கை அழைத்துச் சென்ற பஞ்சாப் போலீஸ் வாகனத்தை அரியானா போலீசார் வழிமறித்தனர்.
பஞ்சாப் போலீசாரை சுற்றி வளைத்த அரியானா போலீசார், தஜிந்தர் சபால் சிங் பக்காவை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். பின்னர் டெல்லி போலீசாரிடம் தஜிந்தர் சபால் சிங் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, டெல்லி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் தஜிந்தரை எடுத்துக் கொண்டதற்கு எதிராக பஞ்சாப் போஈசார் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story