“தற்சார்பு நிலையை உருவாக்க இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
நிலக்கரி துறையில் நாட்டில் தற்சார்பை உருவாக்க நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்தாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மும்பை,
நிலக்கரி எரிவாயு தயாரித்தல் என்ற தலைப்பிலான முதலீட்டாளர் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
நிலக்கரியின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலக்கரியின் தேவை தற்போதுள்ள நிலையை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியின் இறக்குமதியை குறைப்பதும் இந்தத் துறையில் நாட்டில் தற்சார்பு நிலையை உருவாக்குவதும் நிலக்கரி அமைச்சகத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்திதுறையில் இந்தியா தனித்து விளங்க உதவிசெய்யும் விதமாக, நிலக்கரியில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது போன்ற வாய்ப்புகளை ஆராயுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய நிலக்கரி நிறுவனம் மூடிய 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் துறைக்கு அளிக்கவும், அவற்றை மீண்டும் திறந்து வருவாய் பகிர்வு மாதிரியில் உற்பத்தியைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் சுமார் 380 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதாகவும், இதிலிருந்து 30-40 மில்லியன் டன் நிலக்கரியை எளிதாக எடுக்கலாம் என்று தெரிவித்த அவர், சுரங்கப் பணிகளை தொடர்வதன் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதை அதிகரிக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story