இளைஞரணி துணை தலைவர் மரணம்; சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. போராட்டம்


இளைஞரணி துணை தலைவர் மரணம்; சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 10:10 PM IST (Updated: 6 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவர் மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.





கொல்கத்தா,



மேற்கு வங்காளத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக அவரை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்தது.

இதன்படி, பைக்கில் பேரணியாக சென்று அமித்ஷாவை வரவேற்கவும் அக்கட்சி திட்டமிட்டு இருந்தது.  இந்த பேரணியை கொல்கத்தாவின் பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்த அர்ஜுன் சவுராசியா என்பவர் தலைமையேற்று வழிநடத்தி செல்ல முடிவாகி இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா நகரின் காசிபூர் பகுதியில், அமித்ஷாவை வரவேற்க இருந்த பா.ஜ.க. வாலிபரின் உடல் பாழடைந்த கட்டிடம் ஒன்றின் மேற்கூரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை காணப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இது நிச்சயம் படுகொலை என தெரிவித்து உள்ளார்.  கொலை செய்த பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.  அவரது கால்கள் தரையை தொட்டபடி உள்ளன என கூறியுள்ளார்.

கொல்கத்தா பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவராக இருந்து வந்த சவுராசியா கட்சி பணியில் சுறுசுறுப்புடன் செயலாற்றி வந்துள்ளார்.  இதுபற்றி வடக்கு கொல்கத்தா மாவட்ட பா.ஜ.க. தலைவர் கல்யாண் சவுபே கூறும்போது, கொல்கத்தா வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை வரவேற்க 200 உறுப்பினர்களை கொண்ட பைக் பேரணியை சவுராசியா வழிநடத்தி செல்வது என நேற்றிரவு நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

ஆனால், கோஷ் பகன் ரெயில்வே யார்டில் உள்ள கட்டிடமொன்றில் இன்று காலை சவுராசியா உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளார் என கூறினார்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டும் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.  ஆனால், திரிணாமுல் காங்கிரசின் எம்.பி. சாந்தனு சென் கூறும்போது, இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.  போலீசார் நடந்த சம்பவம் பற்றி விசாரிக்கட்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், சவுராசியாவின் குடும்பத்தினரை அமித்ஷா இன்றிரவு சந்தித்து பேசினார்.  அரசியல் அடிப்படையில் பா.ஜ.க. தொண்டரான சவுராசியா கொல்லப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.  வன்முறை அரசியலில் பா.ஜ.க.வுக்கு பயமில்லை.  அதில் நம்பிக்கையுமில்லை.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பயமுறுத்தும் சூழலை உருவாக்க திட்டமிடுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

வங்காளம் காப்பாற்றப்பட வேண்டும்.  எங்களை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story