முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவல் போலியானது: தேசிய தேர்வு வாரியம் விளக்கம்
முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேசிய தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல் பரவியது.
இந்த தகவலை தேசிய தேர்வு வாரியம் மறுத்துள்ளது. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என்று கூறிய தேசிய தேர்வு வாரியம், திட்டமிட்டபடி தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்றும், தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://natboard.edu.in வரும் அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு 011-45593000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story