சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: ஆதாரங்களை போலீசிடம் கொடுங்கள்- எதிர்க்கட்சிகளுக்கு பசவராஜ்பொம்மை வேண்டுகோள்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறக்கூடாது என்றும், உண்மையான ஆதாரங்கள் இருந்தால் போலீசாரிடம் வழங்குங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
இந்த முறைகேட்டில் மந்திரிகள் அஸ்வத் நாராயண், அரக ஞானேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு பின்னணியில் முன்னாள் முதல்-மந்திரியின் மகன் இருப்பதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஆவணங்களை வழங்க வேண்டும்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சந்தா்ப்பத்தில் இவ்விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருவது சரியல்ல. ரூ.300 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பின்னணியில் மந்திரிகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.
குற்றச்சாட்டு கூறுபவர்களிடம் இருந்து உண்மை வெளியே வர சாத்தியமில்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உண்மை வெளியே வர வேண்டும் என்று நினைத்தால், குற்றச்சாட்டு கூறும் எதிர்க்கட்சிகள் தங்களிடம் இருக்கும் ஆவணங்கள், பிற ஆதாரங்களை போலீசாரிடம் வழங்க வேண்டும். அதை விட்டு வெறும் குற்றச்சாட்டு மட்டும் கூறக்கூடாது. அதனால் விசாரணைக்கு எந்த உபயோகமும் இல்லை.
பொறுப்புடன் நடந்து கொள்ள...
குற்றச்சாட்டுகளை கூறும், எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வெறும் பிரசாரத்திற்காக குற்றச்சாட்டு கூறக்கூடாது. போலீசாரிடம் ஆவணங்களை கொடுங்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதானசவுதா வியாபார சவுதா ஆகி விட்டதாக பிரியங்க் கார்கே கூறி இருக்கிறார். ஊழல் என்றாலே காங்கிரஸ் கட்சி தான்.
அந்த கட்சியை சேர்ந்த பிரியங்க் கார்கே ஊழல் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஊழல் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது. பிரியங்க் கார்கேவின் தந்தை மூல காங்கிரசை சேர்ந்தவர். அதனால் அவர்களுக்கு ஊழல் கைவந்த செயலாகும். பா.ஜனதா கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு யார் வநதாலும், அவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்.
டெல்லிக்கு வர அழைப்பு இல்லை
பா.ஜனதாவுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஒரு நிபந்தனையுடனும் வரக்கூடாது. நிபந்தனைகள் இல்லாமல் கட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். பிற கட்சியை அழித்து விட்டு பா.ஜனதா கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்கான அவசியமும் பா.ஜனதாவுக்கு இல்லை. பழைய மைசூரு மண்டல பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதற்காக அந்த பகுதியில் கட்சியை வளர்க்கும் பணியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பழைய மைசூரு பகுதிகளை சேர்ந்த பிரபல தலைவர்கள் பா.ஜனதாவுக்கு தொடர்ந்து வருகை தருவார்கள். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து விட்டு அழைப்பு விடுப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி இருந்தார். அவரிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. மேலிட தலைவர்கள் அழைத்தால் டெல்லி சென்று மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story