குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; ராஜஸ்தான் மந்திரி மகன் மீது வழக்கு
பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்த இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை செய்த ராஜஸ்தான் மந்திரி மகன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் பொது சுகாதார துறைக்கான மந்திரியாக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி. 23 வயது இளம்பெண் ஒருவர் ரோகித்துக்கு எதிராக டெல்லி போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் ரோகித் மீது 376, 328, 312, 366, 377 மற்றும் 506 ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜீரோ எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனை ராஜஸ்தான் போலீசாரிடம் டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இளம்பெண் அளித்த புகாரில், கடந்த ஆண்டு ஜனவரி 8ந்தேதியில் இருந்து நடப்பு ஆண்டு ஏப்ரல் 17ந்தேதி வரை பல முறை மந்திரியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு பேஸ்புக் வழியே இருவருக்கும் இடையே அறிமுகம் நடந்துள்ளது. அதன்பின் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் முதன்முறையாக ஜெய்ப்பூரில் சந்தித்து உள்ளனர். இளம்பெண்ணை சவாய் மாதோபூருக்கு வரும்படி கடந்த ஆண்டு ஜனவரி 8ந்தேதி ரோகித் கூறியுள்ளார்.
முதல் சந்திப்பிலேயே, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பயன்படுத்தி கொண்டார். அடுத்த நாள் காலை எழுந்தபோது, ஆடையின்றி இருந்த இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரிடம் காட்டியுள்ளார் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அந்த புகாரில், மற்றொரு முறை கணவன், மனைவி என எங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொண்டு, ஓட்டல் ஒன்றில் என்னை தங்க வைத்த அவர், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறினார்.
ஆனால், நன்றாக குடித்து விட்டு, தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் என்னை அடித்தும், ஆபாச படங்களையும் எடுத்து வைத்துள்ளார். அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, வைரலாக்கி விடுவேன் என மிரட்டினார் என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆகஸ்டில் கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணிடம் மருந்து எடுத்து கொள்ள சொல்லி ரோகித் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார். இதுபற்றி ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Related Tags :
Next Story