சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் - சித்தராமையா பேச்சு


சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் - சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 10 May 2022 2:50 AM GMT (Updated: 10 May 2022 2:50 AM GMT)

சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு அருகே உள்ள நெலமங்களாவில் காயத்ரி மடத்தின் மடாதிபதி தயானந்தபுரி சுவாமி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு அந்த விழாவை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் சித்தராமையா பேசியதாவது:-

சமுதாயத்தில் சமத்துவம் நிலவினால் தான் நிம்மதி, அமைதி இருக்கும். அமைதி, நிம்மதி, மனிதநேயம், நல்லிணக்கம் இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும். ஒருவர் பிறந்த பிறகு மனிதராக வாழ வேண்டும். சாதியை முன்னிலைப்படுத்துவது என்பது சரியல்ல. சாதிகள் ஒழியும் வரை கீழ் சாதிகள், வஞ்சிக்கப்பட்ட சாதிகள் தங்களின் உரிமைக்காக மாநாடுகள் நடத்துவது என்பது தவிர்க்க முடியாது.

இதை சாதி மாநாடுகள் என்று கருதகூடாது. கல்வி, போராட்டம், ஒற்றுமை குறித்து அம்பேத்கர் பேசியுள்ளார். இதை பின்பற்றினால் சாதிகள் ஒழிந்துவிடும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தால் மட்டும் போதாது, அரசியல் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் சாசனம் வந்த பிறகு தீண்டாமை என்ற சமூக தீங்கு நாசமாகிவிட்டது.

அதிகாரம் என்பது ஒரு சாதியின் சொத்து அல்ல. சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். இதை அம்பேத்கரே சொன்னார். ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் இந்தியா உருவாகவில்லை. இங்கு அனைத்து மதங்களையும் நேசிக்கும், மதிக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். சகிப்புத்தன்மையை அரசியல் சாசனமே கூறியுள்ளது.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது அவருக்கு ரத்தம் வழங்கப்படுகிறது. அது சாதியை பார்த்து வழங்குவது இல்லை. யாருடைய ரத்தம் வேண்டுமானாலும் வழங்கப்படுகிறது. குணமான பிறகு சாதியை பார்த்தால் எப்படி?. தற்போது பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்துவிட்டது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story