கேபினட் மந்திரியின் படத்தை மேடையில் வைத்துக்கொண்டு ஆபாச நடனம்; நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த அதிகாரி சஸ்பெண்ட்!
மந்திரி ஹர்தீப் சிங் டாங் மற்றும் மகிஷாசுர மர்தினி தேவியின் படங்களை மேடையில் வைத்துக்கொண்டு, பார்வையாளர்கள் மத்தியில் ஆபாச நடனம் அரங்கேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
போபால்,
மத்திய பிரதேச கேபினட் மந்திரி ஹர்தீப் சிங் டாங் மற்றும் மகிஷாசுர மர்தினி தேவியின் படங்கள் கொண்ட பேனரை மேடையின் பின்பக்கத்தில் வைத்துக்கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்ட பார்வையாளர்கள் மத்தியில் ஆபாச நடனம் அரங்கேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இச்செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.இதன் காரணமாக, இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த மந்த்சவுரின் தலைமை நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டம் ஷம்கர் நகரில் மகிஷாசுரமர்தினி தேவி மேளா என்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் பின்புறத்தில், பார்வையாளர்களை நோக்கி பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் மகிஷாசுர மர்தினி தேவி கடவுள் படம் மற்றும் மந்திரி ஹர்தீப் சிங் டாங் படங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்ற ஆர்கெஸ்ட்ரா கச்சேரியில், ஒரு ஆபாச பாடலுக்கு பெண் ஒருவர் சற்று ஆபாச ஆடையுடன் ஆடியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இப்படி நடக்கும் என்று தெரியாமல் இந்நிகழ்ச்சிக்கு மந்த்சவுரின் தலைமை நகராட்சி அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
மண்ட்சவுரின் தலைமை நகராட்சி அதிகாரி நசீர் அலி கான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில நகர்ப்புற நிர்வாக மந்திரி பூபேந்திர சிங்குக்கு மந்திரி ஹர்தீப் சிங் டாங் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிகழ்ச்சி மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டார்.
இப்போது இந்த சம்பவத்தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த அதிகாரியின் கவனக்குறைவால் தான் இப்படி நிகழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story