மாநில அமைச்சரவை முடிவிற்கு கவர்னர் முழுமையாக கட்டுப்பட்டவர் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!


மாநில அமைச்சரவை முடிவிற்கு கவர்னர் முழுமையாக கட்டுப்பட்டவர் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
x
தினத்தந்தி 11 May 2022 3:38 PM IST (Updated: 11 May 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.

புதுடெல்லி,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும்  தொடங்கியது. 

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் எடுத்த முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை சமர்பித்தது.

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். கவர்னர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன்? அனைத்து அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு தான் என்றால், 75 ஆண்டுகளாக கவர்னர்கள் அளித்த மன்னிப்பு அனைத்தும் முரணானதா? 

இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா?  கருணை மனு மீது மத்திய அரசு மற்றும் கவர்னர் எடுக்கும் முடிவுகள், ஆகிய அதிகாரத்திற்குள் வேறுபாடுகள் உள்ளன. 

மத்திய அரசின் கூற்றுபடி கிரிமினல் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு என மத்திய அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அமைச்சரவை முடிவை எடுத்து அனுப்பும்போது, கவர்னர் அதன்மீது தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை செலுத்த முடியாது. ஒரு நபரை விடுவிக்கவோ அல்லது மறுக்கவோ கவர்னரால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story