பேரறிவாளன் வழக்கு: அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2022 10:44 AM GMT (Updated: 11 May 2022 10:44 AM GMT)

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தெரிவித்தது.

புதுடெல்லி,

பேரறிவாளன் விடுதலை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பேரறிவாளன் வழக்கில் விசாரணை தொடங்கியதும் கவர்னர் எடுத்த முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை மத்திய அரசு  சமர்பித்தது. தொடர்ந்து, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். 

தண்டனை மீது கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே சென்றுவிட்டால் கவர்னருக்கான சிறப்பு அதிகாரம் ‘161’ என்ற பிரிவு எதற்கு? அது அரசியலமைப்பில் தேவையில்லையா? என பல கேள்விகளை சரமாரி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு, ‘சில சந்தர்ப்பங்களில் கவர்னர் சுயமாகவும் செயல்பட முடியும். மாநில அமைச்சரவையின் பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருந்தால், கவர்னர்  சுயமாக முடிவெடுக்க முடியும். அமைச்சரவையின் முடிவு சட்டவிதிகளை மீறி இருக்கும் பட்சத்தில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு’  என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார்.

தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

‘கவர்னர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில்,  ஜனாதிபதியை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டிருப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததோடு, முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பியது அரசியல் சாசன பிழையாகும்.

கவர்னருக்கு முடிவு எடுக்க அதிகாரம் இல்லை, ஒப்புதல் அளிக்கவே அதிகாரம் உள்ளது; கவர்னர் தன் கடமையை செய்ய தவறியதோடு தேவை இல்லாமல் இதில் ஜனாதிபதியையும் இழுத்து விட்டிருக்கிறார்.

இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது’  என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில், பேரறிவாளன் வழக்கு மீதான விசாரணையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story