காஷ்மீரி பண்டிட் படுகொலை; பாகிஸ்தானை கை காட்ட கூடாது: சஞ்சய் ராவத் சாடல்


காஷ்மீரி பண்டிட் படுகொலை; பாகிஸ்தானை கை காட்ட கூடாது:  சஞ்சய் ராவத் சாடல்
x
தினத்தந்தி 13 May 2022 5:35 AM GMT (Updated: 13 May 2022 5:35 AM GMT)

காஷ்மீரி பண்டிட் படுகொலை விவகாரத்தில், பாகிஸ்தானை கை காட்டாமல் நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்க மத்திய அரசை சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.




ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.  இதற்காக, உள்ளூர் இளைஞர்கள் முதல் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் வரை காஷ்மீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

இதுதவிர, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், ஹைபிரிட் வகை பயங்கரவாதிகள் உள்ளிட்டோரும் ராணுவத்துக்கு சவாலாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சதூரா பகுதியில் அரசு அலுவலகராக இருந்த ராகுல் பட் என்பவரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொன்று விட்டு தப்பியோடினர்.

அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடந்து வருகிறது.  இந்த நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, காஷ்மீரில் 7 ஆண்டுகளில் எத்தனை காஷ்மீரி பண்டிட்டுகள் திரும்பி வந்துள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியாது.  இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி தீவிரமுடன் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.  பாகிஸ்தானை நோக்கி நாம் கைகளை நீட்டி, சுட்டி காட்டி விட்டு இருந்து விட முடியாது.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.  ஜம்மு மற்றும் காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னரும் காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீருக்கு திரும்பி வரவில்லை.  காஷிமீரில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

காஷ்மீரில் வளர்ந்து வரும் இதுபோன்ற ஸ்திர தன்மையற்ற சூழலுக்கு முடிவு ஏற்படுத்த நீங்கள் (மத்திய அரசு) கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ராவத் கூறியுள்ளார்.




Next Story