ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு
ஐக்கிய அரபு அமீரக அதிபரின் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். அவருக்கு வயது 74.
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஷேக் கலீஃபா பின் சையத் அவர்கள் காலமானதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் சிறந்த தலைவராக இருந்தார். அதன் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகள் செழுமையடைந்தன. இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு அமீரக மக்களுடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று அனுப்பிய தகவல்களின்படி, மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை (மே 14 ஆம் தேதி) நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதன்படி இந்தியாவில் நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், அரசு விழாக்கள் நடைபெறாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story