கர்நாடகத்தில் மே 16-ந்தேதி பள்ளிகள் திறப்பு- கர்நாடக அரசு
கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், வருகிற 19-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கியது.
8¾ லட்சம் பேர் எழுதினார்கள்
கடந்த மாதம்(ஏப்ரல்) 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8¾ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள்.
தற்போது வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை தயாராகி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 19-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
19-ந் தேதிதேர்வு முடிவுகள்
மாநிலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளி கல்வித்துறை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. வினாத்தாள் திருத்தும் பணிகளும் 234 மையங்களில் நடந்திருந்தது. 63 ஆயிரத்து 796 ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே நிறைவு பெற இருக்கிறது. அந்த பணிகளை முடிக்கும் நடவடிக்கைகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனால் வருகிற 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் காலையில் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதமாக எஸ்.எஸ்.எல்.சி. உள்ளது. அதனால் வினாத்தாள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை தயாராகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் ஏற்கனவே பள்ளிகள் வருகிற 16-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, திட்டமிட்டபடி வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த ஆண்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story