பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம் - இந்திய வெளியுறவு அமைச்சகம்


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 17 May 2022 10:12 AM GMT (Updated: 2022-05-17T15:42:35+05:30)

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை நிர்ணய நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் கேலிக்கூத்தானது. அதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். 

பாகிஸ்தானின் சட்ட விரோதமான மற்றும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகள் உட்பட, இந்தியாவின் உள் விவகாரங்களில் கருத்து தெரிவிக்கவோ, தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் முழுப் பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. அது எப்போதும் இருக்கும். ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் செய்வது, விரிவான ஆலோசனை மற்றும் பங்கேற்பு கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ஜனநாயக முறையாகும்.

பாகிஸ்தானில் உள்ள தலைமை தனது சொந்த வீட்டை சீரமைக்காமல், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதும், ஆதாரமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வருத்தமளிக்கிறது. 

இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை மூட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும். மேலும் அதன் சட்டவிரோத மற்றும் பலவந்தமான ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்தியப் பகுதிகளை காலி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story