1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது!


1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது!
x
தினத்தந்தி 17 May 2022 10:18 AM GMT (Updated: 17 May 2022 10:18 AM GMT)

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் குஜராத்தில் உள்ள சர்தார் பகுதியில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றித் திரிந்தனர்.

ஆமதாபாத்,

1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு இன்று கைது செய்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் குஜராத்தில் உள்ள சர்தார் பகுதியில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மும்பையில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, மேலும் பலரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1993 மார்ச் 12 அன்று, மும்பையின் 12 வெவ்வேறு பகுதிகளில் 12 குண்டுவெடிப்புகள் நடந்தன. ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கிய இந்த கோர சம்பவத்தில், கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

1993 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா காவல்துறை இந்த வழக்கை சிபிஐக்கு அனுப்பியது. அதன்படி, 190 பேர் மீதான குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது. அப்போது சில குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

அதில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் போலி பாஸ்போர்ட்டுகளுடன் குஜராத்தில் சுற்றித் திரிவதாக குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர்களை சர்தார் நகர் பகுதியில் இருந்து தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அபுபக்கர், யூசுப் பட்கா, ஷோயிப் குரேஷி மற்றும் சையத் குரேஷி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட பல சதிகாரர்கள் மற்றும் குண்டர்கள் பலர்,  நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர்கள் ஆக உள்ளனர். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், சர்வதேச பயங்கரவாத வலையமைப்பான டி-கம்பெனியை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தேசிய புலனாய்வு நிறுவனம்(என் ஐ ஏ) நடத்தி வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story