டுவிட்டரில் மீண்டும் “ப்ளூடிக்” வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனரின் மனு தள்ளுபடி; ரூ.10,000 அபராதம்!


டுவிட்டரில் மீண்டும் “ப்ளூடிக்” வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனரின் மனு தள்ளுபடி; ரூ.10,000 அபராதம்!
x
தினத்தந்தி 18 May 2022 2:26 PM IST (Updated: 18 May 2022 2:26 PM IST)
t-max-icont-min-icon

டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மீண்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்த முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு, கோர்ட்டு அபராதம் விதித்தது.

புதுடெல்லி,

டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மீண்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்த முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு, கோர்ட்டு அபராதம் விதித்தது. மேலும் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

போலி டுவிட்டர் கணக்குகளை அடையாளம் காணும் வகையில் விஐபிக்கள் பயன்படுத்தும் டுவிட்டர் பக்கத்திற்கு, அந்நிறுவனத்தின் சார்பில் ப்ளூடிக் அங்கீகாரம் (அதாவது நீல நிற அடையாளக் குறி) கொடுக்கப்பட்டு வருகிறது. ப்ளூடிக் இருந்தால் மட்டுமே அது இவர்களின் சொந்த பக்கமாக கருத்தில் கொள்ளப்படும். 

இந்நிலையில், சி.பி.ஐ அமைப்பின் இடைக்கால முன்னாள் தலைவராக இருந்த நாகேஸ்வரராவ் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வந்ததால், அவரின் ப்ளூடிக் அங்கீகாரத்தை டுவிட்டர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. தனக்கு மீண்டும் புளூடிக் அங்கீகாரம் வழங்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்தில் நாகேஸ்வர ராவ் முறையிட்டார். அவரின் கோரிக்கைக்கு டுவிட்டர் நிறுவனம் செவிசாய்க்கவில்லை. 

இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக நாகேஸ்வர ராவ் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய டுவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தனர்.

கோர்ட்டு உத்தரவிட்டும் தனக்கு ப்ளூடிக் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “கடந்த ஏப்ரல் 7-ம் தேதிதான் நாங்கள் உத்தரவு பிறப்பித்தோம். அதற்குள் கோர்ட்டை நாடுவதன் அவசியம் என்ன? உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது என நினைக்கிறோம். அதனால் தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பரிசை எதிர்ப்பார்கின்றீர்கள். ரூ.10,000 அபராதமும், உங்கள் மனுவை தள்ளுபடி செய்தும் அதை உங்களுக்கு பரிசாக தருகிறோம்” என உத்தரவில் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Story