பேரறிவாளன் விடுதலைக்கு காரணமான 142வது சட்டப் பிரிவு என்ன சொல்கிறது?


Image Courtesy: thehindu.com(C.venkatachalapathy)
x
Image Courtesy: thehindu.com(C.venkatachalapathy)
தினத்தந்தி 18 May 2022 4:50 PM IST (Updated: 18 May 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலைசெய்து சுப்ரீம் கோர்ட்டு  இன்று தீர்ப்பளித்தது. கவர்னர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்குவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 4வது அத்தியாயம் ஒன்றிய நீதித்துறை தொடர்பாக கூறுகிறது. இதில்தான் சட்டப்பிரிவு 142 வருகிறது. இந்த பிரிவின்படி, மாநில அல்லது மத்திய அரசோ சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து நடக்கவில்லை, அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்றமே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும்.

அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ வகுத்துரைக்கப்படும் முறையிலும், அவ்வாறு நாடாளுமன்றம் வகைசெய்யும் வரையில், ஜனாதிபதி உத்த்ரவின் வழி வகுத்துரைக்கும் முறையிலும், இந்திய ஆட்சி நிலவரை எங்கணும் செயலுறுத்தத் தகுவது என சட்டப்பிரிவு கூறுகிறது

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்  

* கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

* அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.

* 161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.

* முடிவெடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

* சுப்ரீம் கோர்ட்டின்  தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

* இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

* பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.

* பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.

 ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க சுப்ரீம் கோர்ட் இந்தச் சட்டப் பிரிவை பயன்படுத்தியது. அந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசு நியமித்த அறக்கட்டளையிடம் சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது. பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சம்பந்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் இருந்து லக்னோவுக்கு மாற்றவும் இந்தச் சட்டப் பிரிவை சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்தியது.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் எரிவாயு கசிவு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கவும் இந்தச் சட்டப் பிரிவை சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்தியது. 2013இல் ஐபிஎல் ஸ்பாட்-பிக்சிங் முறைகேடு தொடர்பாக விசாரிக்க உத்தரவிடவும் இந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டது.

Next Story