கர்நாடக சட்டசபையில் 209 உறுப்பினர்கள் பதவி ஏற்பு
கர்நாடக சட்டசபையில் 209 உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளனர். குமாரசாமி உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
பெங்களூரு:-
3 நாட்கள் சிறப்பு கூட்டம்
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு நடந்த 16-வது தேர்தல் இதுவாகும். 15-வது சட்டசபையின் காலம் இன்று (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்வதற்காக கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி, காங்கிரஸ் அரசின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் தேஷ்பாண்டே எம்.எல்.ஏ.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேற்று முன்தினம் நடந்த முதல் கூட்டத்தொடரின் போது முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பசவராஜ் பொம்மை உள்பட 182 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
27 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
இந்த நிலையில், 2-வது நாள் கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனான விஜயேந்திரா முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அவர், நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். சிகாரிப்புரா தொகுதியின் குஜ்ஜராயசாமியின் பெயரிலும், உண்மையின் பெயரிலும் விஜயேந்திரா பதவி ஏற்றுக் கொண்டார். இதுபோல், பெலகாவி புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கர் உள்பட 27 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதுவரை மொத்தம் 209 உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுள்ளனர்.
நல்ல நேரம் பார்த்து தான்...
இவர்களில் நவலகுந்து தொகுதி எம்.எல்.ஏ. கோனரெட்டியை நேற்று முன்தினமே பதவி ஏற்க வரும்படி சட்டசபை செயலர் விசாலாட்சி அழைத்தார். ஆனால் அவர் பதவி ஏற்கவில்லை. நேற்றும் அவரது பெயர் வாசிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் கையில் அணிந்திருந்த கெடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்த கோனரெட்டி எம்.எல்.ஏ. சில நிமிடங்கள் கழித்து பதவி ஏற்க வருவதாக கூறினார்.
அப்போது அங்கிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, நல்ல நேரம் பார்த்து தான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பீர்களோ என்று கோனரெட்டியிடம் கூறினார். உடனே சிரித்தபடியே சென்று அவர் பதவி ஏற்றார். இதற்கிடையில், பதவி ஏற்காமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எனது அலுவலகத்திற்கு வந்து பதவி ஏற்றுக் கொள்ளும்படி தற்காலிக சபாநாயகர் கூறினார்.
குமாரசாமி பதவி ஏற்கவில்லை
மேலும் நாளை (அதாவது இன்று) புதிய சபாநாயகர் பதவி ஏற்க இருப்பதால், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க முடியாது, எனது அலுவலகத்திற்கு வந்து பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். பின்னர் சபையை இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஒத்திவைத்த அவர், இன்று புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவித்தார். இன்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், 3 நாட்கள் சிறப்பு சட்டசபை கூட்டம் நிறைவு பெற உள்ளது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா, ஸ்வரூப், தினேஷ் குண்டுராவ், ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 15 பேர் பதவி ஏற்கவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் தான் அதிகஅளவில் பதவி ஏற்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.