கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி


கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி
x
தினத்தந்தி 8 May 2023 1:15 AM IST (Updated: 8 May 2023 5:32 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று இரவு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 2 அடுக்கு சுற்றுலா படகு சென்றுகொண்டிருந்தது. இரவு 7 மணியளவில் தனூர் பகுதியில் சென்றபோது சுற்றுலா படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த பயணிகள் அனைவரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, படகு விபத்தில் மேலும் சில பயணிகள் கடலில் மூழ்கி மாயமான நிலையில் மாயமான பயணிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கேரளாவில் சுற்றுலா படகு பயணம் மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான படகு இரவு 7 மணி வரை கடலில் பயணம் மேற்கொண்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 பேர் விவரம் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் விவரம்:- அஸ்னா (வயது 18), சப்னா (வயது 7), பாதிமா மின்ஹா (வயது 12), சித்திக் (வயது 35), ஜலசியா ஜபீர் (வயது 40), அப்லக் (வயது 7), பைசல் (வயது 3), அன்ஷித், ரஷீனா.


Next Story