கர்நாடகத்தின் 21-வது முதல்-மந்திரி:


கர்நாடகத்தின் 21-வது முதல்-மந்திரி:
x

பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக மாநிலத்தின் 21-வது முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர், பாகல்கோட்டை மாவட்டம் பதாமி தாலுகா கெரூர் கிராமத்தில் கடந்த 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி பிறந்தார். இவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்டது. ஜனசங்கத்தின் மூத்த தலைவரான இவரது தந்தை எஸ்.எஸ்.ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தலில் 5 முறை போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ளார். மேலும் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து உள்ளார். இதேபோல் ஜெகதீஷ் ஷெட்டரின் மாமா சதாசிவ ஷெட்டர் தான் ஜனசங்கத்தின் முதல் தென்இந்தியா தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சட்டபடிப்பை உப்பள்ளியில் முடித்த ஜெகதீஷ் ஷெட்டர், 20 ஆண்டுகள் அங்கு வக்கீலாக பணிப்புரிந்து வந்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து சில்பா ஷெட்டர் என்ற மனைவியும் பிரசாந்த் மற்றும் சங்கல்ப் என்ற 2 மகன்களும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்த ஷெட்டர் பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் அதில் படிப்படியாக உயர்ந்த அவர் கடந்த 1990-ம் ஆண்டு உப்பள்ளி புறநகர் தலைவராகவும், 1994-ம் ஆண்டு தார்வார் மாவட்ட பா.ஜனதா தலைவராகவும் பதவி வகித்தார்.

அதே ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானார். கடந்த 1999-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட ஷெட்டர், அதே ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் உப்பள்ளி புறநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக

தேர்வானார். மேலும் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தில் அமைந்தபோது பா.ஜனதா கட்சி சார்பில் ஷெட்டர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு கர்நாடக மாநில தலைவராக ஷெட்டர் பொறுப்பேற்றார். மேலும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. ஆனால் காங்கிரசிற்கு அளித்து வந்த ஆதரவை ஒரே ஆண்டில் ஜனதாதளம்(எஸ்) கட்சி திரும்ப பெற்றது. இதைதொடர்ந்து குமாரசாமி, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக கடந்த 2006-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது தலைமையிலான மந்திரி சபையில்

ஷெட்டர் வருவாய்த்துறை மந்திரியாக பதவிவகித்தார். மேலும் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜனதா கட்சி சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அப்போது பா.ஜனதா சார்பில் ஷெட்டர் சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான மந்திரி சபையில் கிராமவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பொறுப்பு வகித்தார். ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா மீது பல்வேறு ஊழல் புகார் எழவே கட்சி மேலிடம் அவரை பதவியில் இருந்து இறக்கி நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புதிய முதல்-மந்திரி பதவிக்கான பந்தயத்தில் ஷெட்டரும் களம் இறங்கினார். ஆனால் திடீர் திருப்பமாக அந்த பதவி சதானந்தகவுடாவிற்கு வழங்கப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி சதானந்தகவுடாவிற்கு அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அந்த பதவி ஜெகதீஷ் ஷெட்டருக்கு வழங்கி கட்சி மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி அவர் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். வடகர்நாடக மாவட்டத்தில் பலம் வாய்ந்த தலைவராக வலம் வந்த ஷெட்டர், தனது ஆட்சி காலத்தில் கலசா-பண்டூரி திட்டம், பெலகாவியில் அமைக்கப்பட்டு வந்த சுவர்ண விதான சுவதா கட்டிட பணிகளில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலக கட்டிடத்தை உப்பள்ளி-தார்வார் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் மந்திரி எடியூரப்பா பா.ஜனதாவில் இருந்து விலகியதால் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலை அந்த கட்சி ஷெட்டர் தலைமையில் சந்தித்தது. ஆனால் அந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியை சந்தித்ததை அடுத்து ஷெட்டர் தனது முதல்-மந்திரி பதவியை கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி ராஜினாமா செய்தார். மேலும் அந்த தேர்தலில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான அவர் தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். கடந்த தேர்தலும் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு பா.ஜனதா மேலிடம் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அவர், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய பாடுபட்ட இவர், தற்போது காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர்த்த பிரசாரம் செய்து வருகிறார்.


Next Story