மும்பையில் மற்றொரு சம்பவம் ஓடும் மின்சார ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை


மும்பையில் மற்றொரு சம்பவம் ஓடும் மின்சார ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
x

மும்பையில் மற்றொரு சம்பவமாக ஓடும் மின்சார ரெயிலில் இளம்பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.

மும்பை,

மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று சம்பவத்தன்று இரவு புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 24 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். சர்னிரோடு ரெயில் நிலையம் வந்தபோது பெண் பயணி அமர்ந்திருந்த பெட்டியில் ஆசாமி ஒருவர் ஏறினார். பின்னர் பெண் பயணியை நோக்கி ஆபாசமாக நடந்து கொண்டார்.

இதனை கண்டித்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அடுத்த ரெயில் நிலையமான கிராண்ட் ரோடு நிலையத்தில் இறங்கி தப்பி சென்று விட்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்து 5 நாட்கள் கழித்து கிராண்ட் ரோடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 354ஏ (பாலியல் தொல்லை) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சந்தேகத்துக்குரிய ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 14-ந் தேதி கிர்காவை சேர்ந்த 20 வயது இளம்பெண் மின்சார ரெயிலின் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 40 வயது ஆசாமியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மற்றொரு சம்பவத்தில் 24 வயது இளம்பெண் ஓடும் மின்சார ரெயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது பெண் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story