நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு


நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 4:49 AM GMT (Updated: 8 Jan 2023 5:18 AM GMT)

நாடு முழுவதும் பராமரிப்பு பணி, தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வடஇந்தியாவில் அடர்பனியால் வாகனங்கள், ரெயில், விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் இன்று 20 விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதேபோன்று ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.

இந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்து உள்ளது.

ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, வடக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

42 ரெயில்கள் சென்று சேரும் இடங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 42 ரெயில்களின் பயண தொலைவு குறைக்கப்பட்டு உள்ளது. 34 ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 20 ரெயில்களின் போக்குவரத்து திசைமாற்றி விடப்பட்டு உள்ளது என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

இதனால், கோரக்பூர், லக்னோ, கோட்டயம், கொல்கத்தா, சூரத், உதய்ப்பூர், ஷாலிமர், அமராவதி, பதன்கோட், பல்வால் உள்ளிட்ட பல நகரங்கள் பாதிக்கப்பட கூடும். ரெயில் பயணிகளும் இந்திய ரெயில்வேக்கான என்.டி.இ.எஸ். எனப்படும் வலைதளத்தில் சென்று ரெயில்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால், பயணிகளின் முன்பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளுக்கு பணம் விரைவில் திருப்பி செலுத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


Next Story