இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்


இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 2 July 2023 8:55 PM GMT (Updated: 2 July 2023 8:56 PM GMT)

கிரகஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி கடைசி நாள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:-

200 யூனிட் இலவச மின்சாரம்

கர்நாடகத்தில் கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்த இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து மின் நுகர்வோர் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலானோர் பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களில் சென்று 200 யூனிட் மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள்.

1 கோடி பேர் விண்ணப்பம்

கடந்த ஜூன் 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 1 கோடி பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மொத்தமுள்ள 1 கோடியே 62 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் 1 கோடியே 60 லட்சம் பயனாளிகள் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரகஜோதி திட்டம் நேற்று முன்தினம் முதல் கர்நாடகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாதத்திற்கான மின் கட்டண சலுகை அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் பயனாளிகளுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அறிவிக்கப்படாமல் இருந்தது.

வாடகை வீட்டில் வசிப்போர்...

இருப்பினும் பொதுமக்கள் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வண்ணம் உள்ளனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், பழைய மின் கட்டண ரசீது, ஆதார் கார்டு எண்ணை கொடுத்து இந்த திட்டத்தில் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இலவச மின்சார திட்டத்தின் பயனை பெற வேண்டுமெனில் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

கிரகஜோதி திட்டத்தின் சலுகையை பெற விரும்புவோர் அனைவரும் சேவா சிந்து இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அன்றைய தினம் விண்ணப்பிக்க கடைசி நாள். அதேபோல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதிக்குள் விண்ணப்பித்தால் அதன் சலுகையை செப்டம்பர் மாதம் முதல் பெறலாம்.

வீடுகளின் மாதாந்திர மின் நுகர்வு சராசரியாக 200 யூனிட்டுகளுக்கு குறைவாக இருந்தால், ஆகஸ்டு மாதத்திற்கான இலவச மின்சாரத்தை செப்டம்பரில் பெற முடியும்.

மின் மீட்டர் கணக்கீடு ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை இயங்கும். அதனால் மின் நுகர்வோர் இந்த திட்டத்தின் கீழ் விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்கும் பணியை தாமதிக்க வேண்டாம்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


Next Story