2.69 லட்ச சுய உதவி குழுக்கள்... 27 லட்சம் குடும்பங்கள் பலன்; இது குஜராத் மாடல்
குஜராத் முழுவதும் பல்வேறு விசயங்களுக்காக, 1.18 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.4,338 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
காந்திநகர்,
இந்தியாவின் நவீனத்துவத்திற்கு மகளிருக்கு அதிகாரமளித்தலை தன்னுடைய தொலைநோக்கு பார்வையின் ஒரு மைய தூணாக பிரதமர் மோடி வைத்திருக்கிறார். அதிலும், கிராமப்புற பெண்களை உயர்வடைய செய்வதில் சிறப்பு முக்கியத்துவமும் கொடுத்து வருகிறார் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்கை அதிகரிக்கவும், சுயசார்பை ஊக்குவிக்கவும் நோக்கம் கொண்டிருக்கிறார். இதற்காக, 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிஷன் மங்களம் திட்டம் குஜராத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த சுய உதவி குழுக்களுடன் 27 லட்ச குடும்பங்கள் தொடர்பில் உள்ளன. அவர்களில் 23 லட்சம் பெண்கள் ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பலன்களை பெற்றுள்ளனர்.
குஜராத் கிராமத்தில் 2021-22 ஆண்டில் 15 மாவட்டங்களை சேர்ந்த 8,500 பெண்கள் சேர்ந்து 3 மாதங்களில் 5 ஆயிரம் மெட்ரிக் டன்கள் வேப்பம்பழங்களை சேகரித்து ரூ.4 கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தனர்.
குஜராத் முழுவதும் பல்வேறு விசயங்களுக்காக, 1.18 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.4,338 கோடி அளவிலான கடன்களும் வழங்கப்பட்டு உள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. குஜராத்தில் மொத்தம் 2,69,507 சுய உதவி குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன.