அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட பாலை குடித்த 27 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு
ராஜஸ்தானில் அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட பாலை குடித்த 27 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரில் பால் கோபால் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பால் பவுடரினால் ஆன பால் இன்று வழங்கப்பட்டது.
அப்போது பால் குடித்த 27 மாணவிகள் வாந்தி மற்றும் குமட்டல் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஓபி சாஹர் தெரிவித்தார்.
அதில், 22 மாணவிகள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர், 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பால் பவுடரில் கலந்த நீரின் மாதிரி ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் காங்கிரஸ் அரசு விளையாடுவதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. முதல்-மந்திரி அசோக் கெலாட் நவம்பர் 29 அன்று இத்திட்டத்தை மாநிலத்தில் தொடக்கிவைத்தார்.
இதன்படி ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பால் பவுடரில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.