காங்கிரஸ் கூட்டம் அர்த்தமுள்ள எதனையும் சாதிக்க தவறி விட்டது; பிரசாந்த் கிஷோர்


காங்கிரஸ் கூட்டம் அர்த்தமுள்ள எதனையும் சாதிக்க தவறி விட்டது; பிரசாந்த் கிஷோர்
x

குஜராத், இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என பிரசாந்த் கிஷோர் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் கடந்த 13ந்தேதி தொடங்கி நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் விவகாரங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய மற்றும் மாநில உறவுகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்வது ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

5 மாநில தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருந்த காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. அதில், காங்கிரசில் கிஷோர் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

எனினும், கட்சியில் அதிகாரமளிக்கும் செயல் குழுவில் கிஷோர் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டு கொண்ட சூழலில், அதனை பிரசாந்த் கிஷோர் ஏற்க மறுத்து விட்டார்.

கட்சிக்கு என்னை விட தலைமைத்துவம் தேவையாக உள்ளது என கிஷோர் பின்னர் கூறினார். கட்சியில் வேரூன்றியுள்ள கட்டமைப்பு விவகாரங்களை சீர்திருத்தங்கள் வழியே கூட்டாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், காங்கிரசின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி கிஷோர் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், உதய்பூரில் நடந்து முடிந்த காங்கிரசின் சிந்தனை அமர்வு கூட்டம் பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள் என தொடர்ந்து என்னிடம் கேட்கிறீர்கள்.

என்னுடைய பார்வையில், வரவிருக்கிற குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் தோல்வி வரை, காங்கிரஸ் தலைமைக்கு சிறிது காலஅவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது மற்றும் தற்போதுள்ள நிலைமையே நீடிப்பது ஆகியவை தவிர அர்த்தமுள்ள எதனையும் சாதிக்க இந்த கூட்டம் தவறி விட்டது என கூறியுள்ளார்.

இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் என கிஷோர் குறிப்பிட்டு உள்ளது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story