மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், குழந்தை பலியான விவகாரம்; 3 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம்


மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், குழந்தை பலியான விவகாரம்; 3 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம்
x

பெங்களூருவில் மெட்ரோ தூண் கம்பிகள் விழுந்து தாய், குழந்தை பலியான சம்பவத்தில் 3 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பெங்களூரு:

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

பெங்களூரு கல்யாண்நகரில் வசித்து வருபவர் லோகித்குமார். இவரது மனைவி தேஜஸ்வினி. இந்த தம்பதிக்கு 2½ வயதில் விகான் என்ற ஆண் குழந்தையும், மற்றொரு பெண் குழந்தையும் இருந்தது. இந்த 2 குழந்தைகளும், இரட்டை குழந்தைகள் ஆகும். லோகித்குமார் சிவில் என்ஜினீயர் ஆவார். அவரது மனைவி தேஜஸ்வினி கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் லோகித்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கல்யாண்நகரில் இருந்து நாகசந்திராவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சில்க்போர்டு-தேவனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் பாதைக்காக, எச்.பி.ஆர். லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் தூண் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் கோபுரம் போல் அமைக்கப்பட்டு இருந்தது.

3 பேர் பணி இடைநீக்கம்

அந்த இரும்பு கம்பிகள் சாய்ந்து லோகித்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் தேஜஸ்வினி, அவரது குழந்தை விகான் பலத்த காயம் அடைந்து உயிர் இழந்தனர். லோகித்குமாரும், அவரது பெண் குழந்தையும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தான் தாய், குழந்தை பலியாக நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மெட்ரோ தூணுக்கான இரும்பு கம்பிகள் விழுந்து தாய், குழந்தை பலியாக காரணமாக இருந்த 3 என்ஜினீயர்களை பணி இடைநீக்கம் செய்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அலட்சியம் காரணமாக நடந்தது

பெங்களூருவில் மெட்ரோ தூணுக்கான இரும்பு கம்பிகள் விழுந்து தாய், குழந்தை பலியான விவகாரத்தில் 3 என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்.பி.ஆர். லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பணிகளை கவனித்து வந்த மெட்ரோ டெப்போ என்ஜினீயர், செயல் என்ஜினீயர், செக்ஷன் என்ஜினீயர் ஆகிய 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட காரணங்களால் 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரும்பு கம்பிகள் விழுந்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் கட்டுமான பணிகளை செய்து வந்த என்.சி.சி. நிறுவனத்தின் மீது போலீசார் கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

8 பேர் மீது வழக்கு

இதற்கிடையில், மெட்ரோ தூண் இரும்பு கம்பிகள் விழுந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நாகர்ஜுனா நிறுவனத்தின் உரிமையாளர் நாகர்ஜுனா, அந்த நிறுவனத்தின் என்ஜினீயர் பிரபாகர், இயக்குனர் சைதன்யா, மேற்பார்வையாளர்களான மதாய் மற்றும் லட்சுமிபதி, விகாஷ் சிங், மெட்ரோ ரெயில் என்ஜினீயர் வெங்கடேஷ், மற்றொரு என்ஜினீயரான மகேஷ் ஆகிய 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ தூணுக்கான இரும்பு கம்பிகள் விழுந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தபுரா போலீசாரிடம், தேவையான ஆவணங்களை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி அறிக்கையை வழங்க உள்ளனர் என்று கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோவிந்தபுரா போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் 8 பேரிடமும் விசாரணை நடத்திவிட்டு, கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இரும்பு கம்பிகள் விழுந்தது எப்படி?

பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட் மெட்ரோ ரெயில் தூணுக்கான இரும்பு கம்பிகள் விழுந்ததில் தாய், குழந்தை பலியாகினர். இரும்பு கம்பிகள் விழுவதற்கு முறையான பாதுகாப்பு இல்லாதது தான் காரணம் என்றும், இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களில் கான்கிரீட் போட வேண்டும் என்றும், அவ்வாறு போடாமலும், இரும்பு கம்பிகள் சாய்ந்து விழாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யாமலும் இருந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், விழுந்த மெட்ரோ தூணுக்கான இரும்பு கம்பிகள் சாயாமல் இருக்க வயர்கள் கட்டப்பட்டு இருந்தது. அந்த வயர் அறுந்த காரணத்தால், இரும்பு கம்பி சாய்ந்துள்ளது. அந்த வயர் எப்படி அறுந்தது? அதனை அதிகாரிகள் எப்படி கவனிக்காமல் இருந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுப்பது உறுதி, என்றார்.


Next Story