ராஜஸ்தான்: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள கத்து ஷியாம்ஜி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் கத்து ஷியாம்ஜி கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வந்த பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர்.
இந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் கோவில் கதவு திறக்கப்பட்டது. இதனையடுத்து, கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனைவரும் முயன்றனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு பின்னால் இருந்தவர்களும் அடுத்தடுத்து விழுந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுப்பி வைத்தனர்.