மரக்கிளை விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம் நிவாரணம்; கீழ் கோர்ட்டு உத்தரவை உறுதி செய்த ஐகோர்ட்டு


மரக்கிளை விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3½ லட்சம் நிவாரணம்; கீழ் கோர்ட்டு உத்தரவை உறுதி செய்த ஐகோர்ட்டு
x

மரக்கிளை விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3.62 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

பெங்களூரு:

மரக்கிளை விழுந்து சாவு

வடகர்நாடகத்தை சேர்ந்தவர் சாம்ராவ் பட்டீல் (வயது 44). இவர் கடந்த 2006-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் சாலையோரம் நின்ற தைலமரத்தின் கிளை முறிந்து சாம்ராவ் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த சாம்ராவ் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3.62 லட்சம் வழங்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இதனை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் மரத்தின் கிளை விழுந்ததால் சாம்ராவ் உயிரிழந்தார் என்றும், மோட்டார் வாகனத்தை பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்து இல்லை என்றும் கூறியது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் நடந்து வந்தது.

வாகன விபத்து தான்

இந்த நிலையில் மனு மீது நடந்த இறுதி விசாரணையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், அரசு பஸ் மீது மரம் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்ட வழக்கை முன்வைத்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் தனது தரப்பு நியாயத்தை கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சந்தேஷ், மரம் விழுந்து வாகன ஓட்டி உயிரிழந்தாலும் அவர் வாகனத்தில் சென்ற போது விபத்து நடந்து இருப்பதால் இது வாகன விபத்து தான் என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3.62 லட்சம் வழங்க வேண்டும் என்ற கீழ் கோர்ட்டின் தீர்ப்பையும் நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார்.


Next Story