பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி தெரிவித்தார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்களுக்கு திருப்திகரமாக மூலவர் தரிசனமும், வாகனச் சேவையின்போது உற்சவர் தரிசனமும் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் 2 ஆயிரத்து 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்படும். 3-வது கட்டமாக 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இரு மலைப்பாதைகளில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பிரம்மோற்சவத்தின்போது திருட்டுச்சம்பவம் நடக்காமல் இருக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்புப் படைகளுடன் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்களும், 460 சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 5 ஆயிரம் ேபர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருட சேவைக்காக சிறப்பாக 1,256 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவத்தையொட்டி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம்-1 மற்றும் 2 வழியாக இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் செல்ல சிறப்பு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.