குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மேலும் 3 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்...!
குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகி உள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
காங்கிரசில் இருந்து முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் ஏற்கனவே விலகி உள்ளனர்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மேலும் 3 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். கதுவா மாவட்டம் பானி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகி உள்ளனர். கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.