1,500 இளநீர் காய்களை திருடிய 3 பேர் கைது; 60 கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஆய்வு செய்து போலீசார் பிடித்தனர்


1,500 இளநீர் காய்களை திருடிய 3 பேர் கைது; 60 கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஆய்வு செய்து போலீசார் பிடித்தனர்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

ஜெயநகரில் 1,500 இளநீர் காய்களை திருடிய 3 பேரை, 60 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஜெயநகர் ராஷ்டிரிய வித்யாலயா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சலீம் என்பவர் இளநீர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் சரக்கு வேனில் வந்த மர்மநபர்கள், சலீம் வியாபாரத்திற்காக குவித்து வைத்திருந்த 1,500 இளநீர் காய்களை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுதொடர்பாக சலீம் கொடுத்த புகாரின் பேரில் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 மர்மநபர்கள் சரக்கு வாகனத்தில் வந்து இளநீர் காய்களை திருடியதும், வாகன பதிவெண் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ஆனால் மர்மநபர்களின் முகம் தெளிவாக பதிவாகவில்லை.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள 60 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசாருக்கு, இளநீர் திருடர்கள் பற்றி முக்கிய துப்பு கிடைத்தது. அதாவது இளநீர் காய்களை திருடிய மர்மநபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்ததும், பின்னர் அவர்கள் தங்களது செல்போனில் இருந்து கூகுள் பே மூலம் டீக்கான தொகையை கொடுத்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கூகுள் பே செல்போன் எண் மூலம் துப்பு துலக்கி இளநீர்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கவுதம், ரகு, மணிகண்டா என்பதும், இவர்கள் தான் சலீம் கடையில் 1,500 இளநீர்களை திருடியதும் தெரியவந்தது.

மேலும் இதில் ரகு மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும், கவுதம், மணிகண்டா மீது திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து சரக்கு வாகனம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story