ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது


ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புலித்தோல் விற்க முயன்றவரை பிடித்து துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாகி விட்ட சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மாரத்தஹள்ளி:-

புலித்தோல் விற்க முயன்றவர்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரங்கநாத். அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஹரீஷ். இவர்கள் 2 பேரும் சேர்ந்து மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புலித்தோல், நகங்கள் மற்றும்

பற்களை விற்பனை செய்ய முயன்ற ராமான்ஜனி என்பவரை பிடித்து இருந்தனர்.

ஆனால் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாத் மற்றும் ஹரீஷ் அழைத்து செல்லவில்லை. மாறாக பாகலூரில் உள்ள ஒரு வீட்டில் ராமான்ஜனியை அடைத்து வைத்திருந்தனர். அங்கு வைத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.40 லட்சம் கொடுக்கும்படி அவரை, போலீசார் மிரட்டி உள்ளனர். குறிப்பாக ராமான்ஜனி தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

போலீஸ்காரர் கைது

அத்துடன் ராமான்ஜனி குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு, புலித்தோல் மற்றும் பற்களை விற்க முயன்ற வழக்கில், அவரை விடுவிக்க ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் ரங்கநாத்தும், ஹரீசும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடமும், பாகலூர் போலீஸ் நிலையத்திலும் ராமான்ஜனி உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ராமான்ஜனியை கடத்தி, ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டியதாக போலீஸ்காரர் ஹரீஷ், இதற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களான சப்பீர், ஜாகீர் ஆகிய 3 பேரையும் பாகலூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ராமான்ஜனி மீட்கப்பட்டார். ஹரீஷ் கைதானதும் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாத் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, ரங்கநாத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story