ஏரியில் மூழ்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி


ஏரியில் மூழ்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
x

மத்தூரியில் ஏரியில் மூழ்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

மண்டியா

ஏரியில் குளித்தனர்

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா வலகெரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜு. இவரது மனைவி சைலஜா(வயது 30). இவர்களது மகன் தேஜஸ்(11). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகன் யோதன்(15). நேற்று காலையில் சைலஜா தனது வீட்டில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலுக்காக கிராமத்தையொட்டி அமைந்துள்ள ஏரிப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அவருடன் அவருடைய மகன் தேஜசும் சென்றான். அப்போது அங்கு ஏற்கனவே யோதன் தங்கள் வீட்டு கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் யோதனும், தேஜசும் சேர்ந்து ஏரியில் குளித்தனர்.

சேற்றில் சிக்கி தத்தளித்தனர்

அப்போது அவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி தத்தளித்தனர். அதைப்பார்த்த சைலஜா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஓடி ஏரியில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் சேற்றில் சிக்கிக் கொண்டார். மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர். அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடோடி வந்து அவர்களை மீட்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி மத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான யோதன் மலவள்ளியில் உள்ள ஒரு அரசு பள்ளியி 8-ம் வகுப்பு படித்து வந்தான். தேஜஸ் மத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story