கர்நாடகத்தில் கனமழைக்கு பெண்கள் உள்பட 3 பேர் சாவு


கர்நாடகத்தில் கனமழைக்கு பெண்கள் உள்பட 3 பேர் சாவு
x

கர்நாடகத்தில் கனமழைக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். கட்டபிரபா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 10 பாலங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

3 பேர் பலி

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தளகூர் கிராமத்தில் பெய்த மழைக்கு சரிதா (வயது 35) என்பவரின் வீடு இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர், தனது பிள்ளைகளான சுனில்(9), தீக்சித்(8) ஆகியோரை அழைத்துகொண்டு வீட்டின் அருகே வசித்து வந்த சந்திரம்மா (47) என்பவரின் வீட்டில் இரவு படுத்து தூங்கினார். அப்போது சந்திரம்மாவின் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடு இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி சரிதா, சந்திரம்மா பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் 2 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.

அவர்கள் 2 பேரும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல் என்.ஆர். புரா தாலுகா சந்தோலே கிராமத்தை சேர்ந்த பிரசன்னா (51) என்பவர் அரிசினகெரே கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சந்தோலே பகுதியில் சென்றபோது திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாைலயோரம் இருந்த கால்வாயில் விழுந்தது. இதில் காருடன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரசன்னா நீரில் மூழ்கி பலியானார். சிவமொக்காவில் ஆகசபள்ளி அருகே கவுலி கிராமத்தில் ஜான் (55) என்பவரின் வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜான், சாதீக் (6), உமர் (7) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்

மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வடகர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள துங்கபத்ரா, பசவசாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. துங்கபத்ரா அணையில் இருந்து நேற்று கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகல்கோட்டை மாவட்டம் மச்சகனூர் கிராமத்தில் உள்ள ஒலேபசவேஸ்வரா கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கொப்பல் மாவட்டம் கங்காவதியில் உள்ள பெரும்பாலான பாலங்களை தண்ணீர் மூழ்கடித்து உள்ளது.

பாலங்கள் மூழ்கும் அபாயம்

பல்லாரி மாவட்டம் ஹம்பியில் உள்ள புராதன சின்னங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கொப்பல் அருகே சிவபுராவில் ஆற்றின் மறுகரையில் சில விவசாயிகள் சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கட்டபிரபா, மல்லபிரபா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிக்கோடி தாலுகாவில் 10 பாலங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த பாலங்கள் தான் கர்நாடகம்-மராட்டியத்தை இணைக்கிறது. இதனால் கர்நாடகம்-மராட்டியம் இடையே போக்குவரத்து பாதிக்கப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. கலபுரகியில் கனமழைக்கு 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. ஹாவேரி மாவட்டம் ஹாவேரி, ராட்டிஹள்ளி, ராணிபென்னூர் தாலுகாக்களிலும் கனமழைக்கு சோளம், மக்கா சோளம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.


Next Story