3 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது - மல்லிகார்ஜூன கார்கே


3 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது - மல்லிகார்ஜூன கார்கே
x
தினத்தந்தி 2 March 2023 5:31 PM GMT (Updated: 2 March 2023 5:37 PM GMT)

திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

இனிப்பு வழங்கியகாங்கிரஸ் தலைவர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கலந்துரையாடல்

இதைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே கலந்துரையாடினார். காங்கிரஸ் ஆட்சியின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. ஆட்சியில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்யா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

தாக்கத்தை ஏற்படுத்தாது

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய பல தலைவர்கள் விரும்புகின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் ஆதரிப்பவர்களை கூட்டணியுடன் இணைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்வர வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த மாநிலங்கள் மிகச்சிறிய மாநிலங்கள் ஆகும்.

பொதுவாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த மாநில மக்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பர்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


Next Story