கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு


கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:45 PM GMT)

சிவமொக்கா அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

சிவமொக்கா:

3 பேர் சாவு

சிவமொக்கா அருகே கல்லுகொப்பா பகுதியில் தாவணகெரே நோக்கி சென்ற காரும், சிவமொக்கா நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. விபத்து நடந்ததும், டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்தை பார்த்ததும் அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடியவரை மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா மெக்கான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ஜினீயரிங் மாணவர்கள்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து

போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தாவணகெரேயில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த கார்த்திக், விவேக், மோகன் என்பதும், படுகாயம் அடைந்தவர் ருத்ரேஷ் பட்டீல் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 4 பேரும் தாவணகெரேயில் இருந்து சிவமொக்காவுக்கு வந்துவிட்டு திரும்பி செல்லும்போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் சிவமொக்கா-தாவணகெரே சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார், விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story