3 மனைவிகளும் தேர்தலில் போட்டி; 3-வது மனைவி இருப்பதை மறைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்...!


3 மனைவிகளும் தேர்தலில் போட்டி; 3-வது மனைவி இருப்பதை மறைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்...!
x

3-வது மனைவி இருப்பதையும், அவர் தேர்தலில் போட்டியிடும் தகவலை மறைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சிங்குரோலி மாவட்டம் கோஹ்ரா கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வருபவர் சுக்ராம் சிங். இவருக்கு குஷுகலி சிங், கீதா சிங் மற்றும் ஊர்மிளா சிங் என மொத்தம் 3 மனைவிகள் உள்ளனர்.

இதனிடையே, அம்மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதில், போட்டியிடுவோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதேவேளை, அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுக்ராம் சிங்கின் 3 மனைவிகளும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சுக்ராம் சிங்கின் முதல் மனைவி கீதா சிங் மற்றும் இரண்டாவது மனைவி ஊர்மிளா சிங் ஆகிய இருவரும் பிபர்ஹட் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களமிறங்கியுள்ளனர்.

அதேபோல், சுக்ராம் சிங்கின் 3-வது மனைவி ஊர்மிளா சிங் ஜன்பத் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், சுக்ராம் சிங் தனது மனைவிகளான கீதா சிங் மற்றும் ஊர்மிளா சிங் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும், தனது 3-வது மனைவி ஊர்மிளா குறித்த தகவலையும் அவர் ஜன்பத் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்ற தகவலையும் சுக்ராம் மறைத்துள்ளார்.

இது குறித்து உரிய விளக்கம் கேட்டு சுக்ராமிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நோட்டீசுக்கு சுக்ரான் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதையடுத்து, 3-வது மனைவி தேர்தலில் போட்டியிடுவது குறித்த தகவலை மறைத்ததற்காக கோஹ்ரா கிராம பஞ்சாயத்து செயலாளர் சுக்ராமை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story