திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி ஆந்திரா-தமிழகம் இடையே 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளன.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திரா-தமிழகம் இடையே 300 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும், என இரு மாநில போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளன. பிரம்மோற்சவ விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பஸ்களை இயக்குவது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் நடந்தது.
கூட்டத்தில் இரு மாநில அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்று சிறப்புப் பஸ்களை இயக்குவது குறித்து விவாதித்தனர். அதன் பிறகு ஒப்பந்தத்தில் ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஜிதேந்திரநாத்ரெட்டி, நரசிம்முலு, தமிழக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ராஜமோகன், குணசேகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன் பிறகு இரு மாநில அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் மாதம் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடக்கிறது.
2 பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாக 150 சிறப்புப் பஸ்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாக 150 சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்புப்பஸ்கள் இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் சிறப்புப் பஸ்களும் இயக்கப்படும்.
திருப்பதி-சென்னைக்கு ஊத்துக்கோட்டை வழியாக 30, திருப்பதி-காஞ்சீபுரத்துக்கு புத்தூர், திருத்தணி வழியாக 20, திருப்பதி-சென்னைக்கு ஸ்ரீகாளஹஸ்தி வழியாக 5, திருப்பதி- திருவண்ணாமலைக்கு வேலூர், சித்தூர் வழியாக 10, திருப்பதி-வேலூருக்கு சித்தூர் வழியாக 65, திருப்பதி-கிருஷ்ணகிரிக்கு சித்தூர், குப்பம் வழியாக 15, திருப்பதி-ஓசூருக்கு சித்தூர், குப்பம் வழியாக 5 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, காஞ்சீபுரம், திருத்தணி, திருப்பத்தூர், சென்னை, தாம்பரம், மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 150 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.